Friday, October 17, 2008

அன்புள்ள அம்மா!

பொய்யச் சொல்லி சேர்த்த,
மெய்யின்னுதான் இங்கிருக்கேன்
என்னைப்போல
அம்மா
எல்லாருக்கும் தூரத்துல இருக்காம்!

எனக்கு சட்டை தைக்க
அம்மா நீ
எத்தனை பாத்திரம் தேய்க்கணும்?
உன் கைகள் போல
என் ஆடையும் தேய்ந்து போச்சு...

வயசுக்கு மீறிய வளர்ச்சின்னு
தெருவோர வாலிபம் கிளர்ச்சியடையுது
என் வறுமை வாயிலில் கண் நுழைத்து!

நீ என்னை இங்கு
விட்டபோது வாங்கித் தந்த
மிட்டாய்
எறும்பு தின்னுப் போச்சு!
என் மகிழ்ச்சி இங்கே
எப்பவோ தொலைஞ்சு போச்சு!

நல்லா படிக்கிறேன்னு வாத்தியார்
தினமும் மிட்டாய் தர்றார்!
அத வாங்கித் தின்னும் எனக்கு
வாந்தி மயக்கம் வேற!

எப்படியிருந்தாலும் அம்மா
நான் உன்ன காட்டிக் கொடுக்க மாட்டேன்
அடுத்த முறையாவது நீ
அம்மாவாக வாம்மா!
என்ன கூட்டிக்கிட்டு போம்மா!!

Friday, October 10, 2008

முரண்பாடு

இதயங்கள்
இரண்டும் உரசிக்கொண்டன
முங்கில்களாகத்தான்!
ஆனால்
தீ பற்றிக் கொண்டதென்னவோ
ஒன்றில்தான்!!

Thursday, October 2, 2008

ஜார்ஜ் மைக்கேல் பாடல்கள்

மேலை நாட்டு இசையில் எனக்கு மிகவும் பிடித்தது George Michael பாடல்கள். இங்கே சில YouTube பதிவுகள்.

Careless Whisper



Faith


Saturday, June 7, 2008

இன்னமும் இங்கேதான் இருக்கிறேன்


நானாகத்தான் உன்னை தேடினேன்!
நீ என் அருகில் இருந்த போதும்
நான் தொலைத்ததைப்போல உன்னை தேடினேன்!
எனக்குள் நீ மறைந்து போனதால்.

நீ
என்னை நேசிக்கவில்லை

இப்படித்தான் நினைத்தேன்
நான் அழும் போது நீ சிரித்ததால்.
ஏழை உன் சிரிப்பில் இறைவனைக் கண்ட போதும்.

நீ
என்னை உயர்த்தவில்லை என்றிருந்தேன்

நீ எனக்காக உன் படிப்பை மறந்த போதும்!
என் வெற்றியின் கருவாய் நீ உயிர்த்துப் போனதால்.

உன்னைக் கனவில்
காதலித்தபோது
நினைவில் இருந்திருப்பேனோ?
இருக்காது!
உன்னை நினைவில்
காதலித்தபோது
கனவில் இருந்திருப்பேன்

Friday, June 6, 2008

என் வழி ஜட்டி வழி

பொள்ளாச்சியில் அரை நிர்வாணத்தில் வரும் கொள்ளை கும்பல் ஒன்று தினமும் மக்களை பீதி அடைய வைத்து வருகிறது.

பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியில் உள்ள சேரன் நகர், வடுகம்பாளையம், லட்சுமி நகர், திருவிக நகர், போன்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நள்ளிரவில் வரும் இந்த கொள்ளையர்கள் உடல் முழுக்க எண்ணெய் பூசியும், உடலில் ஒரே ஒரு ஜட்டி மட்டும் அணிந்தும் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லை நகரில் கோபால குரு என்பவரது வீட்டில் நள்ளிரவில் ஜட்டி கொள்ளையர்கள் புகுந்தனர். சத்தம் கேட்டு கோபால குரு மனைவி விழித்து பார்த்த போது, வீட்டில் மர்ம நபர்கள் புகுந்துள்ளதை உறுதி செய்து கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கோபால குருவின் மனைவி பேபி, மகன் சிவநேசனை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

திருவிக நகரில் ஆறுக்குக்கும் மேற்பட்ட வீடுகளில் இது வரை ஜட்டி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் பொது மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

என் வழி தனி வழி உச்ச நடிகர் தியேட்டரில் உரக்க கூவுவதை கேட்டிருக்கிறோம். இது என்ன வழி? ஜட்டி வழி!

Thursday, June 5, 2008

ஜாதி இரண்டொழிய வேறில்லை!

இந்தியாவில் உயர் கல்வி படிப்பு மற்றும் அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடுஅமல் படுத்தப்பட்டு வருகிறது அல்லது அமல் படுத்தப்படப் போகிறது.

இது அவசியம் தானா?

இட ஒதுக்கிட்டால் யாரெல்லாம் பயனடைகிறார்கள், யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?

வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஓரளவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் அறிவாளிகளில் creamy layer என்று சொல்லப்படும் உயர் வகுப்பினர் பெரும்பாலும் இப்போது இந்திய அரசு பணிகளை விரும்புவது இல்லை. அவர்களுக்கு நல்ல சம்பளம் ஈட்டித் தரும் தனியார் துறைகளும் மற்றும் வெளி நாட்டு வாய்ப்புகளும் இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. அப்படியிருக்கும் போது மிக சொற்ப வருமானம் கிடைக்கும் அரசு வேலைகளுக்கு ஏன் மண்டையை உடைப்பானேன்.

பிரச்சனை எல்லாம் உயர் கல்வி வாய்ப்பிற்குத்தான். காலம் காலமாக அனுபவித்து வந்த சவுகர்யங்களை இனி இழக்க நேரிடுமோ? ஒவ்வொரு உயர் வகுப்பை சேர்ந்தவருக்கும் இப்போது இந்த கவலை தான். படிக்க வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில் என்ன வருத்தம். நானும் படிக்கிறேன் நீயும் படிச்சிட்டுப் போ என்று நினைக்கும் மனோபாவம் ஏன் இல்லாமல் போனது. ஒருவேளை அவர்களோடு சேர்ந்து படிக்கும் தகுதி பிறருக்கு இல்லை என்று இன்னமும் கருதுகிறார்களா?

இந்தியாவில் தகுதி எப்படி கணக்கிடப்படுகிறது அல்லது நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முதலில் ஆராய வேண்டியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் படிப்பு மற்றும் வேலை தேர்விற்கு merit index என்று ஒரு அளவுகோல் பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு வேலைக்கு படிப்புத்தகுதி பட்டயப் படிப்பு என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் SSLC, HSC மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் (சதவிதங்களில்) கூட்டப் படுகின்றன. இந்த எண்ணுடன் நேர்முகத் தேர்விற்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதுவும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் அதிகப் பட்சமாக 400 மதிப்பெண்கள் பெற முடியும். போட்டியிடும் நபர்களில் அதிக மதிப்பெண் பெரும் நபர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

இந்த முறை சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரு குழப்பமும் நிகழாது.

ஆனால் உயர் கல்வி கூடங்களில் என்ன நடக்கிறது? மாணவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? பட்டயப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு (JEE) நடத்தப்படுகிறது. அதிக மதிப்பெண் எடுப்பவருக்கு விரும்பும் துறையும் அனுமதியும் கிடைக்கிறது. இங்கே எந்த தில்லு முல்லுவும் நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் எல்லாம் கணணி மூலம் நடக்கிறது.


மேற்படிப்புக்கு மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? சில வகுப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது (JAM & GATE). சில படிப்புகளுக்கு இதற்கும் மேலாக நேர்முகத்தேர்வும் நடத்தப் படுகிறது. இங்குதான் தகுதி என்பது வேண்டியபடி வளைக்கப்படுகிறது. தேர்வுக்குழு ஒருவரை தேர்ந்தெடுக்க நினைத்துவிட்டால் எந்த வழியிலாவது அவரது தகுதி உயர்த்திக் காண்பிக்கப்பட்டு விடும். இதற்கான வழிமுறைகள் மாறுபடலாம். ஆனால் தகுதி எப்படியாவது ஜோடிக்கப்படுகிறது/உருவாக்கப்படுகிறது. இதே நிலைதான் ஆசிரியர் தேர்விலும் நடக்கிறது. இதைத்தான் மெரிட் என்கிறார்களா, "youth for equivality" என்ற ஆயுதத்தை திடிரென்று கையில் எடுத்திருக்கும் புண்ணியவான்கள்.

Equivality என்பதற்கு, அனைவருக்கும் வாய்ப்பு என்பதை விட்டுவிட்டு, தகுதியானவருக்கு வாய்ப்பு என்று முன் மொழிகிறார்கள்.

ஏற்கனவே தகுதி பல தேர்வுகளில் உருவாக்கத்தான் படுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்டவர்களில் இட ஒதுக்கீடு என்ற அளவில் தகுதி உருவாக்கப் படுவதால் எந்த இழிவும் ஏற்பட்டுவிடாது!

ஒதுக்கீட்டில் நுழையும் மாணவர்கள் பல கல்வி நிறுவனங்களில் அவமானப் படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களையும் அணைத்துச் சென்று சமமாக கல்வி புகட்டப் படுமானால் இட ஒதுக்கீடு நிச்சயம் பலனளிக்கும்.

இட ஒதுக்கீடு செல்வ செழிப்புடன் வாழும் பிற்படுத்தப் (சாதியால்) பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்கிறது ஒரு வாதம். இந்த creamy layer நபர்களால் இட ஒதுக்கீடு கேலி கூத்தாகிறது என்கிறார்கள் இவர்கள். ஒருவகையில் இது சரியாகத்தான் படுகிறது. இது பிற்படுத்தப் பட்டவர்களுக்குள் நிகழ வேண்டிய விவாதம். இதை முன்னேறிய சமூகத்தினர் முன் வைப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக!

வசதியா வாழும் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டவரும் தன் குழந்தைக்கு நல்ல படிப்பை/தகுதியை/தளத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும். நான் வளர்ந்து விட்டேன். இனி என் குழந்தைக்கு சாதி சான்றிதழும் இட ஒதுக்கீடும் தேவையில்லை என்ற மனோபாவம் நல்ல நிலையை அடைந்து விட்ட ஒவ்வொரு பிற்படுத்தபட்டவருக்கும் வரும் போதும், கல்வி அனைவருக்கும் பொதுவானது என்ற எண்ணம் பிறர்க்கு வரும் போதும் இட ஒதுக்கீடு தேவையற்றதாகி விடும்.

Wednesday, June 4, 2008

பெட்ரோல் டீசல் விலையேற்றம்

இன்றைய அனல் கக்கும் செய்தி, இந்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் கடுமையான விலையேற்ற செய்தியாத்தான் இருக்கும். பெட்ரோல் விலை ரூ. 5, டீசல் விலை ரூ. 3 மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகபட்சமாக ரூ. 50ம் கூடியுள்ளது.

விலையேற்றதிற்கு சொல்லப்பட்டுள்ள காரணம் கச்சா எண்ணெயின் உலகளாவிய விலையேற்றம்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் எரிபொருள்களின் விலை ஏறித்தான் உள்ளது. ஆனால் இந்த அளவுக்கு ஏறியுள்ளது என்று சொல்ல முடியாது.

உதாரணத்திற்கு, தைவானில் பெட்ரோல் விலை ஒரு அமெரிக்கன் டாலர் தான். கிட்டத்தட்ட நம்ம ஊர் விலையை விட ரூ. 10 குறைவு. சமையல் எரிவாயுவின் விலையும் கணிசமாக குறைவு தான். இவர்களும் எரிபொருட்களை இறக்குமதிதான் செய்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும், விலையை ஏற்றாவிட்டால் பெட்ரோல் கம்பெனிகள் பெரும் நஷ்டம் அடையும் என்று வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை விடுகிறார்கள். நஷ்டம் அடையும் இந்த கம்பெனிகள்தான் இந்தியாவின் பொதுத்துறை கம்பெனிகளிலேயே அதிக சம்பளம் தருபவைகளாகும். இங்கு யாரைக் காப்பாற்ற யார் முயலுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இப்படிப்பட்ட விலை உயர்வுகளினால் பாதிக்கப்படுவது யார்? நிதி அமைச்சரோ அல்லது மாநில முதல்வரோ நிச்சயமாக பாதிக்கப்பட போவதில்லை. வியாபாரி இதை காரணம் காட்டி விலைகளை கூட்டி அதிக லாபம் ஈட்டப் போகிறான்.

சாமானியனின் நிலைதான் ரொம்ப மோசம். அரசு உழியரின் நிலைமை அதைவிட பெரும் சோகம். சம்பளம் கூடுமா கூடாதா என்பதை தெரிந்து கொள்வதேற்கே அவன் சாலமன் பாப்பையா உதவியை நாடும் சூழ்நிலை.

ஒரு வருடத்திற்கு எட்டு சிலிண்டர்கள்தான் சாதாரண விலையில் இனி வாங்க முடியும். அதற்கு மேல் தேவைபட்டால் இரண்டு மடங்கு விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். கிட்டதட்ட 14 கிலோ சிலிண்டர் விலை ரூ. 700. இந்த விலை உலகின் எந்த மூலையிலும் நிச்சயமாக இருக்காது.

ஒரு சராசரி இந்தியனின் வாங்கும் சக்தி எந்த நிலையில் உள்ளது என்பதை எண்ணினால் இந்த விலையேற்றமும் வரும் காலமும் நிச்சயம் அச்சுறுத்துவதாகத்தான் உள்ளது.

இந்தியாவில் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஒன்று நிதியமைச்சராக இருக்க வேண்டும் அல்லது நிதியமைச்சரின் வாகன ஓட்டுனராக இருக்க வேண்டும் போல.