Wednesday, June 4, 2008

பெட்ரோல் டீசல் விலையேற்றம்

இன்றைய அனல் கக்கும் செய்தி, இந்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் கடுமையான விலையேற்ற செய்தியாத்தான் இருக்கும். பெட்ரோல் விலை ரூ. 5, டீசல் விலை ரூ. 3 மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகபட்சமாக ரூ. 50ம் கூடியுள்ளது.

விலையேற்றதிற்கு சொல்லப்பட்டுள்ள காரணம் கச்சா எண்ணெயின் உலகளாவிய விலையேற்றம்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் எரிபொருள்களின் விலை ஏறித்தான் உள்ளது. ஆனால் இந்த அளவுக்கு ஏறியுள்ளது என்று சொல்ல முடியாது.

உதாரணத்திற்கு, தைவானில் பெட்ரோல் விலை ஒரு அமெரிக்கன் டாலர் தான். கிட்டத்தட்ட நம்ம ஊர் விலையை விட ரூ. 10 குறைவு. சமையல் எரிவாயுவின் விலையும் கணிசமாக குறைவு தான். இவர்களும் எரிபொருட்களை இறக்குமதிதான் செய்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும், விலையை ஏற்றாவிட்டால் பெட்ரோல் கம்பெனிகள் பெரும் நஷ்டம் அடையும் என்று வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை விடுகிறார்கள். நஷ்டம் அடையும் இந்த கம்பெனிகள்தான் இந்தியாவின் பொதுத்துறை கம்பெனிகளிலேயே அதிக சம்பளம் தருபவைகளாகும். இங்கு யாரைக் காப்பாற்ற யார் முயலுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இப்படிப்பட்ட விலை உயர்வுகளினால் பாதிக்கப்படுவது யார்? நிதி அமைச்சரோ அல்லது மாநில முதல்வரோ நிச்சயமாக பாதிக்கப்பட போவதில்லை. வியாபாரி இதை காரணம் காட்டி விலைகளை கூட்டி அதிக லாபம் ஈட்டப் போகிறான்.

சாமானியனின் நிலைதான் ரொம்ப மோசம். அரசு உழியரின் நிலைமை அதைவிட பெரும் சோகம். சம்பளம் கூடுமா கூடாதா என்பதை தெரிந்து கொள்வதேற்கே அவன் சாலமன் பாப்பையா உதவியை நாடும் சூழ்நிலை.

ஒரு வருடத்திற்கு எட்டு சிலிண்டர்கள்தான் சாதாரண விலையில் இனி வாங்க முடியும். அதற்கு மேல் தேவைபட்டால் இரண்டு மடங்கு விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். கிட்டதட்ட 14 கிலோ சிலிண்டர் விலை ரூ. 700. இந்த விலை உலகின் எந்த மூலையிலும் நிச்சயமாக இருக்காது.

ஒரு சராசரி இந்தியனின் வாங்கும் சக்தி எந்த நிலையில் உள்ளது என்பதை எண்ணினால் இந்த விலையேற்றமும் வரும் காலமும் நிச்சயம் அச்சுறுத்துவதாகத்தான் உள்ளது.

இந்தியாவில் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஒன்று நிதியமைச்சராக இருக்க வேண்டும் அல்லது நிதியமைச்சரின் வாகன ஓட்டுனராக இருக்க வேண்டும் போல.

0 மறுமொழிகள்