Sunday, June 1, 2008

சந்திப்பு

சில எழுத்தாளர்களின் பேட்டியை படிப்பது மிகவும் சுவையாக இருக்கும், அவர்களின் எழுத்தைப்போல. எனக்கு சாருநிவேதிதா எழுதுவது வியப்பாகாவும் வேடிக்கையாகவும் இருக்கும். அவைகளில் சுவராஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்பதால் இன்னமும் அவரது எழுத்துக்களை விரும்பிப் படிக்கிறேன். சாருவின் இரண்டு பேட்டிகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அவைகளிலிருந்து கிண்ட கிடைத்தவைகள்.

குமுதம் வலையில் ஞானி பாலகுமாரனை சமிபத்தில் வதை செய்திருந்ததை பலரும் பார்த்திருக்கலாம்/கேட்டிருக்கலாம். அப்போது ஞானி பாலகுமாரனிடம் உங்களின்அடையாளம் எது என்று கேட்பார். அதற்கு பாலகுமாரன், "எனக்கு அடையாளம் தேவையில்லை. அது எனக்கு எதிரில் இருப்பவருக்குத்தான் தேவை" என்பார். இதை எதற்கு இங்கு எழுதுகிறேன் என்றால், சமிபத்தில் ஆனந்த விகடன் இதழில் சாருவை அடையாளப்படுத்துவது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

"கழுத்தில் ஆறேழு தங்கச் சங்கிலிகளைப் போட்டுவிட்டால், தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம். 'ஜீரோ டிகிரி', 'கோணல் பக்கங்கள்' என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்... சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம். "

அவரின் எழுத்துக்களின் காம வாசனையை நுகர்ந்ததாலோ என்னவோ பலரும் அவரிடம் செக்ஸ் மற்றும் கற்பு பற்றியே கேள்வி கேட்கிறார்கள். சில கேள்விகள்:

  1. குஷ்பு பேசிய கற்பு பிரச்சனைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
  2. பிரேமானந்தாவில் இருந்து ஜெயலட்சுமி வரைக்கும் தமிழகத்தின் திடீர் பிரபலங்கள் அத்தனை பேரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்களிலேயே சிக்குவது தொடர்கதையாக இருக்கிறதே...

இது போன்ற கேள்விகளுக்கு சாருவின் பதில்தான் என்ன? சாரு ஓஸோவாக மாறி விடுகிறார். "நம் சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். செக்ஸ்னா அசிங்கம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிற சமூகத்தில், செக்ஸ் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கும். காலத்துக்கும் தேவைகளையும் ஆசைகளையும் அழுத்தி அழுத்தி உள்ளேயே பூட்டிட்டு அலைந்தால், பசி அதிகமாகும். வக்கிரம்தான் தலைதூக்கும். பசி அதிகமாகி விட்டால், பிடுங்கிச் சாப்பிடுகிற மாதிரி எங்கேயாவது வாய்ப்பு கிடைக்கிறபோது, எதற்கும் தயாராகிவிடுகிறார்கள். " இதையெல்லாம் வெளியிடுவதால் ஆனந்த விகடனின் சர்குலேசன் அதிகரிக்கும், சாருவின் பிரபல்யம்?

சாரு எழுதுவது என்ன? எந்த வகையில் சேர்த்தி?

"இங்கே செக்ஸுவாலிட்டி என்பது ஒரு பிரச்னை. நான் அதை எக்ஸ்போஸ் பண்ணுகிறேன்."

பிரச்னையை யார் வேண்டுமானாலும் வெளிக் கொணரலாம்

ஆனால் தீர்வு?

எந்த எழுத்தாளனுக்கும் இல்லாத அளவு வாசகர் மத்தியில் உங்களைப் பற்றி மட்டும் பல கதைகள் உலவுகின்றன. நீங்கள் ஒரு ஸ்திரீலோலன் , ஆண்மோகி, அரவாணி, குடிகாரன், நரமாமிசம் தின்பவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகள். இந்தக் கதைகளுக்கெல்லாம் உங்களின் எழுத்தே ஒரு காரணமாக இருக்குமா?

"ஆமாம். என்னுடைய எழுத்துதான் காரணம். பொதுவாக நான் ஒரு குழந்தை மாதிரி. என் மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறேன். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது."

ஆமாம் குழந்தைகளுக்கு தீ சுடும் என்று தெரியாது. அதனால் தீயைத் தொடும். சுட்டவுடன் அழும். பிறகு தீயைத் தொடாது. சாரு குழந்தை தானா?

போர்னோகிராஃபி வகையறா எழுத்துகளுக்கும் உங்களின் எழுத்திற்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்விக்கும்

விலைமாதுவுடன் உங்கள் அனுபவம் இப்படித்தானா இருந்தது? என்று விஜய் டிவி ரோஸ் கேட்டதிற்கும் மட்டும் சாரு பதில் சொல்ல தயங்குகிறார்.

ஏன்? குழந்தைத்தனம் தான்!

சாருவிற்கு பெரிய நட்புப் பட்டாளம் வலையுலகில் உள்ளது என்பது எனக்குத் தெரியும். அவர்களாலும் பதில் சொல்ல இயலாது.

0 மறுமொழிகள்