Thursday, June 5, 2008

ஜாதி இரண்டொழிய வேறில்லை!

இந்தியாவில் உயர் கல்வி படிப்பு மற்றும் அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடுஅமல் படுத்தப்பட்டு வருகிறது அல்லது அமல் படுத்தப்படப் போகிறது.

இது அவசியம் தானா?

இட ஒதுக்கிட்டால் யாரெல்லாம் பயனடைகிறார்கள், யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?

வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஓரளவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் அறிவாளிகளில் creamy layer என்று சொல்லப்படும் உயர் வகுப்பினர் பெரும்பாலும் இப்போது இந்திய அரசு பணிகளை விரும்புவது இல்லை. அவர்களுக்கு நல்ல சம்பளம் ஈட்டித் தரும் தனியார் துறைகளும் மற்றும் வெளி நாட்டு வாய்ப்புகளும் இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. அப்படியிருக்கும் போது மிக சொற்ப வருமானம் கிடைக்கும் அரசு வேலைகளுக்கு ஏன் மண்டையை உடைப்பானேன்.

பிரச்சனை எல்லாம் உயர் கல்வி வாய்ப்பிற்குத்தான். காலம் காலமாக அனுபவித்து வந்த சவுகர்யங்களை இனி இழக்க நேரிடுமோ? ஒவ்வொரு உயர் வகுப்பை சேர்ந்தவருக்கும் இப்போது இந்த கவலை தான். படிக்க வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில் என்ன வருத்தம். நானும் படிக்கிறேன் நீயும் படிச்சிட்டுப் போ என்று நினைக்கும் மனோபாவம் ஏன் இல்லாமல் போனது. ஒருவேளை அவர்களோடு சேர்ந்து படிக்கும் தகுதி பிறருக்கு இல்லை என்று இன்னமும் கருதுகிறார்களா?

இந்தியாவில் தகுதி எப்படி கணக்கிடப்படுகிறது அல்லது நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முதலில் ஆராய வேண்டியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் படிப்பு மற்றும் வேலை தேர்விற்கு merit index என்று ஒரு அளவுகோல் பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு வேலைக்கு படிப்புத்தகுதி பட்டயப் படிப்பு என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் SSLC, HSC மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் (சதவிதங்களில்) கூட்டப் படுகின்றன. இந்த எண்ணுடன் நேர்முகத் தேர்விற்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதுவும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் அதிகப் பட்சமாக 400 மதிப்பெண்கள் பெற முடியும். போட்டியிடும் நபர்களில் அதிக மதிப்பெண் பெரும் நபர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

இந்த முறை சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரு குழப்பமும் நிகழாது.

ஆனால் உயர் கல்வி கூடங்களில் என்ன நடக்கிறது? மாணவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? பட்டயப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு (JEE) நடத்தப்படுகிறது. அதிக மதிப்பெண் எடுப்பவருக்கு விரும்பும் துறையும் அனுமதியும் கிடைக்கிறது. இங்கே எந்த தில்லு முல்லுவும் நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் எல்லாம் கணணி மூலம் நடக்கிறது.


மேற்படிப்புக்கு மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? சில வகுப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது (JAM & GATE). சில படிப்புகளுக்கு இதற்கும் மேலாக நேர்முகத்தேர்வும் நடத்தப் படுகிறது. இங்குதான் தகுதி என்பது வேண்டியபடி வளைக்கப்படுகிறது. தேர்வுக்குழு ஒருவரை தேர்ந்தெடுக்க நினைத்துவிட்டால் எந்த வழியிலாவது அவரது தகுதி உயர்த்திக் காண்பிக்கப்பட்டு விடும். இதற்கான வழிமுறைகள் மாறுபடலாம். ஆனால் தகுதி எப்படியாவது ஜோடிக்கப்படுகிறது/உருவாக்கப்படுகிறது. இதே நிலைதான் ஆசிரியர் தேர்விலும் நடக்கிறது. இதைத்தான் மெரிட் என்கிறார்களா, "youth for equivality" என்ற ஆயுதத்தை திடிரென்று கையில் எடுத்திருக்கும் புண்ணியவான்கள்.

Equivality என்பதற்கு, அனைவருக்கும் வாய்ப்பு என்பதை விட்டுவிட்டு, தகுதியானவருக்கு வாய்ப்பு என்று முன் மொழிகிறார்கள்.

ஏற்கனவே தகுதி பல தேர்வுகளில் உருவாக்கத்தான் படுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்டவர்களில் இட ஒதுக்கீடு என்ற அளவில் தகுதி உருவாக்கப் படுவதால் எந்த இழிவும் ஏற்பட்டுவிடாது!

ஒதுக்கீட்டில் நுழையும் மாணவர்கள் பல கல்வி நிறுவனங்களில் அவமானப் படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களையும் அணைத்துச் சென்று சமமாக கல்வி புகட்டப் படுமானால் இட ஒதுக்கீடு நிச்சயம் பலனளிக்கும்.

இட ஒதுக்கீடு செல்வ செழிப்புடன் வாழும் பிற்படுத்தப் (சாதியால்) பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்கிறது ஒரு வாதம். இந்த creamy layer நபர்களால் இட ஒதுக்கீடு கேலி கூத்தாகிறது என்கிறார்கள் இவர்கள். ஒருவகையில் இது சரியாகத்தான் படுகிறது. இது பிற்படுத்தப் பட்டவர்களுக்குள் நிகழ வேண்டிய விவாதம். இதை முன்னேறிய சமூகத்தினர் முன் வைப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக!

வசதியா வாழும் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டவரும் தன் குழந்தைக்கு நல்ல படிப்பை/தகுதியை/தளத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும். நான் வளர்ந்து விட்டேன். இனி என் குழந்தைக்கு சாதி சான்றிதழும் இட ஒதுக்கீடும் தேவையில்லை என்ற மனோபாவம் நல்ல நிலையை அடைந்து விட்ட ஒவ்வொரு பிற்படுத்தபட்டவருக்கும் வரும் போதும், கல்வி அனைவருக்கும் பொதுவானது என்ற எண்ணம் பிறர்க்கு வரும் போதும் இட ஒதுக்கீடு தேவையற்றதாகி விடும்.

0 மறுமொழிகள்